திங்கள், 8 செப்டம்பர், 2014

தமிழில் அச்சேறிய முதல் நூல்


தமிழில் அச்சேறிய முதல் நூல்
லிஸ்பன் நகரில் 1554இல் அச்சிடப்பட்ட "கார்த்தில்யா"(Carthilha) என்ற நூலே முதல் தமிழ் நூல் என்பர்.
இந்நூலில் தமிழ் எழுத்துகள் கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும், செபங்களும் அடங்கியுள்ளன.
ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (1520–1600):இவர் ஒரு போர்த்துகீசிய மத போதகர். தமிழில் நூல்களை அச்சடிக்க என தொடக்க காலத்தில் அச்சுக் கூடத்தினை நிறுவி தமிழில் நூல்களை அச்சிட்டவர். 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் வணக்கம் என்ற நூலினை அச்சில் வெளியிட்டவர். கிரிசித்தியாணி வணக்கம் என்ற நூலினையும் கொண்டு வந்தவர்.
கி.பி.1679ஆம் ஆண்டில் அந்தோணி பிரயோன்சா அடிகளார் போர்த்துகீசிய-தமிழ் அகராதியை உருவாக்கினார். வீரமாமுனிவர் சதுரகராதியை 1732இல் வெளியிட்டார். மேலும் அவர் தமிழ்-லத்தீன் அகராதி, போர்த்துகீசியம்-தமிழ்-லத்தீன் அகராதி ஆகியவற்றையும் வெளியிட்டார். 

தமிழில் முதல் அச்சு புத்தகம்:"தம்பிரான் வணக்கம்"

தமிழில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சில் இறக்கிய முதல் புத்தகம் போர்த்துகீசிய மொழியில்  “Doctrina Christam” என்ற புத்தகத்தின் மொழிபெயர்க்கப்பட்ட  "தம்பிரான் வணக்கம்" என்பதாகும். இந்த 16 பக்கங்களை கொண்ட புத்தகம் அன்றைய மலையாள தேசத்தில் கி பி 1578ல் கொல்லம் நகரில் அச்சிடப்பட்டது. இந்த பெருமை தமிழ்நாட்டில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த  பரவர் இன மக்களிடையே கிருஸ்த்துவ மதத்தை தீவிரமாக பிரசாரம் செய்த ஜேசு சபையை சேர்ந்த போதகர் தந்தை ஹென்றிக் ஹென்ரிக்ஸ் (Fr.Anrique Anriquez (1520–1600) அவரையே சேரும் . முதல் தமிழ் அச்செழுத்துக்களை  உண்டாக்கியவர் ஸ்பெயின் தேசத்தை சேர்ந்த ஜேசுசபை  தந்தை யுவான் கனசால்வாஸ்   (Spanish Jesuit Fr Juan Gonsalvez ) ஆவர். இப்பெரியார் கி பி 1577ல்  கோவா வில் தமிழ் எழுத்துகளின் அச்சுகளை வடித்தார்.

"தம்பிரான் வணக்கத்திலி"ருந்து ஓர் பகுதி :

"ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து.." 

ஆனால் தமிழ் மொழியில் முதலில் அச்சில் வந்த புத்தகம் "கார்தில்யா"
 என்ற ஜெப புத்தகமே என கருதப்படுகிறது. இது பொர்த்துகல்  நாட்டில் லிஸ்பன் நகரில் தமிழ் மொழியினை லத்தீன் எழுத்துக்களில்
அச்செடுக்கப்பட்டது. இந்த முயற்சிக்கான சிலவுகளை பரவர் இனத்தவரே கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   
 
 Portuguese influence in Tamil:

Portuguese influence in the life of Tamils was so strong that many words from Portuguese language has become normal use in Tamil vocabulary today. அவற்றில் சில
அலமாரி (Armário), ஜன்னல்,(Janale) மேஜை(Mesa), மேஸ்திரி (Mestiri),சாவி(Chave), வராந்தா(Varanda),குசினி (Cozinha),   
சப்பு (Chupo),  பீப்பாய் (Pipa),  அன்னாசி (Ananás).


வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சக்தி பீடம்-சாரதா பீடம்



சாரதா பீடம்

சாரதா பீடம் மற்றொரு சக்தி பீடம் ஆதி சங்கரரால் விவரிக்கப்பட்டுள்ள 18 மகா சக்தி பீடங்களில் உள்ளது. இது இப்போது பாகிஸ்தானால் கையக ப்படுத்தப்பட்டுள்ள (POK ) காஷ்மீரப் பகுதியில் உள்ளது . இத் திருக்கோயில் உள்ள இடம் தேவியின் வலது கை விழுந்த இடம் என வர்ணிக்கப்படுகிறது. இன்று மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. அனால் ஒரு காலத்தில் இங்குதான் ஒரு பெரிய சமஸ்க்ருத நூலகம் இருந்திருக்கிறது.. இன்று "பாரமுல்லா" விலிருந்து 96 கி மீ தொலைவில் "நீலம்" பள்ளத்தாக்கில் 11000 அடி உயரத்தில் உள்ள இந்த பீடம் உள்ள இடமே சாரதா கிராமம் என்று அழைக்கப்படுகிறது. சீன யாத்ரிகர் "யூவன் சாங்" சி.632ல் இங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்திருக்கிறார் . மேலும் இஸ்லாமிய யாத்ரிகர் "அல் பருனி " மற்றும் அக்பரின் அமைச்சர் "அபுல் பாசல்" அவர்கள் சாரதா பீடத்தை தங்கள் எழுத்துக்களில் குறித்திருக்கிறார்கள். ஆதி சங்கரர் மற்றும் இராமானுஜர் இங்கு வந்து இருந்ததாக கூறப்படுகிறது. சமீப காலம் வரை இந்த இடம் கஷ்மிர பண்டிதர்களின் முக்கிய இருப்பிடமாக இருந்தது. இவ்வளவு பிரபலமான சக்திபீடத்தில் இன்று ஓரிரு ஹிந்துக்களே உள்ளனர் என்பது வருத்தப்படகூடிய செய்தியாகும். ஆனால் சமீப காலத்தில் தங்கள் கலாசாரத்தில் பற்றுள்ள சில கஷ்மீர இஸ்லாமிய சகோதரர்கள் இத்தலத்தை புதிப்பிக்க அரசாங்கத்துடன் கலந்து முயற்சி எடுத்துள்ளனர்.

ப்ரஹ்மண்யன்,

சக்தி பீடங்கள்



ஹிங்லாஜ் சக்திபீடம்:

ஹிங்லாஜ் சக்தி பீடம் இன்றைய பாக்கிஸ்தானத்தில் உள்ளது . இது பலூசிஸ்தான் மாநிலத்தில் லியாரி தாஹ்சிலில் உள்ள "கனராஜ்" மலைத்தொடரில் உள்ள ஓர் திறந்த குஹையில் உள்ளது. அருகிலேயே "ஹிங்கோல் " நதி ஓடுகிறது. இது சதி தேவியின் நெற்றி தெறித்த இடம் (ஹிங்குல் - கும்குமம்) என கொண்டாடப்படுகிறது. இந்த சக்தி பீடம் ஒரு காலத்தில் மேற்கு, வடமேற்கு இந்தியாவில் உள்ள ஹிந்துக்களால் விசேஷமாக கொண்டாடப்பட்டு வந்தது . அன்றைய கால கட்டத்தில் பலுச்சிஸ்தானத்தில் அரசு வகித்த "பானுசாலி" ( பன்சாலி ) என்ற சூரிய வம்சத்து ஹிந்து அரசர்களின் குல தெய்வமாக ஆராதிக்கப்பட்டு வந்தது. இன்றும் ப்ரஹ்ம க்ஷத்ரியர், பவசர் க்ஷத்ரியர், பன்சாலி என்ற பல க்ஷத்ரிய வம்சத்தினருக்கு குலதெய்வமாக போற்றப்படுகிறது. இந்த இடம் ஒரு மணல் பாங்கான பாலைவனத்தின் மத்தியில் உள்ளது. மலைத்தொடரில் ஆசிய கண்டத்தின் மிகபெரிய வறண்ட மணல் எரிமலை இருக்கிறது . இப்போது வறண்டு மணலும் சேரும் தான் சேர்ந்திருக்கிறது.
ஹிங்லாஜ் சக்திபீடம் கராச்சியிலிருந்து 250 கி மீ தொலைவில் உள்ளது. இங்கு செல்ல யாத்ரிகர்களுக்கு பாகிஸ்தான் அரசு எல்லா சௌகரியங்களையும் செய்து இருக்கிறது. தவிர ஹிங்க்லாஜ் சேவா மண்டலி என்ற அமைப்பு உலகில் பல்வேறு இடங்களிலிருந்து வருடம் இருமுறை கொண்டாடப்படும் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.இத்திருத்தலத்தை அங்கு இருக்கும் மக்கள் (முஸ்லிம் மதத்ததை சேர்ந்தவர்கள்) நானி கா மந்திர் (பாட்டியின் கோயில்) என அன்புடம் கூறுகிறார்கள். இத்தலம் அவர்கள் பாதுகாப்பில் தான் உள்ளது.

ப்ரஹ்மண்யன்

ஞாயிறு, 24 மார்ச், 2013

அது அந்தக்காலம்

அந்தக்காலந்தில்  சரஸ்வதி பூஜை  கழிந்து விஜய தசமி யன்று வித்யாப்யாசம்  செய்து பள்ளியில் சேர்ப்பது வழக்கம் .ஆனால்  என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு வேறொரு முக்கிய காரணம். வீட்டில் எனது விஷமங்களை சமாளிக்க முடியாமல் எனது தாயார் எங்கள் வீட்டில் ஒரு பகுதியில் குடியிருந்த எலிமெண்டரி பள்ளி வாத்தியார் ராமநாத அய்யரிடம் கேட்டு என்னை பள்ளியில் சேர்த்தார். பள்ளி எங்கள் வீட்டுக்கு அருகில், நடக்கும் தூரத்தில் இருந்தது. வயது குறைவாக இருந்ததினால் எனது வயதில் ஒரு வருடத்தைக்கூட்டி பதிவுசெய்து விட்டார் எனது தாயார்.. தினமும் வாத்தியாருடன் பள்ளி சென்று வருவேன்  . ஆனால் எனக்கு படிப்பைவிட விளையாட்டிலேயே நாட்டமிருந்ததால் பல  நாட்கள் பாதி வகுப்பிலிருந்து வீட்டுக்கு திரும்பிவிடுவேன் . எங்கள் பள்ளி  (கோவை)ஆர் எஸ் புரம் முனிசிபல் எலிமெண்டரி ஸ்கூல் என்ற பள்ளி.  மங்களூர் ஒட்டு கூரை யுடன் கூடிய நேர்த்தியான கட்டிடம்,  நாலு ஏக்கருக்குமேல் விளையாட  மைதானம். இலவச கல்வி. காலையில் முதலில் பள்ளியில் எல்லா மாணவர்களும் வரிசையாக நின்று  "கல்லார்க்கும்  கற்றவர்க்கும்  களிப்பருளும்  களிப்பே" என்ற திரு அருட்பாவுடன்  கடவுள் வாழ்த்து பாட்டு பாடுவோம்.  இங்கேதான் மகாகவி பாரதியாரின் பாட்டுக்களை நான் கற்றறிந்தேன் . எனக்கு பிடித்த பாட்டு  மகாகவியின்  "பாரத சமுதாயம் வாழ்கவே "என்ற கவிதை தான். பள்ளியின் "பெரிய வாத்தியார்" சிங்காரவேலு முதலியார் , நல்ல மனிதர்.  இப்பள்ளியே  சில வரு டங்களுக்குப்பின்  எட்டாம் வகுப்புகளுடன் நடுநிலைப் பள்ளியாக மாறியது . பிறகு ஆர். எஸ். புரத்திலேயே குமாரசாமி ஏரிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட பெரிய கட்டிடத்தில் மேநிலைப்   பள்ளியாக மாறியது. நான் இப்பள்ளியிலேயே படித்து  அதனுடன் வளர்ந்து வந்தேன் .

மேநிலைப் பள்ளியின் ஹெட் மாஸ்டர் கோவிந்தாச்சாரி,மிகவும் கண்டிப்பானவர் . அதிகம் பேச மாட்டார் . காலை இரண்டாவது மணி அடித்தவுடன் கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு பிரம்புடன் பள்ளி முழுவதிலும் சுற்றி வருவார் .பள்ளி தாழ்வாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது என்பது அவரது கண்டிப்பு. அவருடன் பல புதிய ஆசிரியர்கள் சிட்டி முனிசிபல்மே நிலைப் பள்ளியி லிருந்து மாற்றப்பட்டனர் அவர்களில் ஸ்ரீநிவாச அய்யர், நடேச அய்யர், கௌரி அம்மாள் ஜான் வாத்தியார்,  வெங்கடேச  அய்யர், நாராயணசாமி நாயுடு  என்பவர்கள் எனது ஆசிரியர்களாக இருந்தவர்கள்.திறமை மிக்க   இவ்வாசிரியர்கள் யாவரும் பிற்பாடு புதிதாக ஆரம்பித்த பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டது ஒரு சிறப்பான நிகழ்வு  .   ஸ்ரீ நிவசரகவாச்சர்யர் எனது சம்ஸ்க்ருத  ஆசிரியர் .அந்த நாட்களில் ஹிந்தி  மற்றும் தக்கிளியில் நூல் நூற்பது என்று இருவகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன . இவை கட்டயப்பாடங்கள்  (Compulsory subjects) என்று அழைக்கப்பட்டன .ஆனால் இவையிரண்டும் தேர்வுக்கு அவசியமில்லை யாகையால் மாணவர்கள்   யாரும் அதிக கவனம் செல்லுத்தவில்லை. அன்றைய ஆசிரியர்கள் யாவரும் பள்ளிக்கு மிகவும் கவனமாக உடை உடுத்திக்கொண்டு வருவார்கள் . பெரியவாத்தியார் மற்றும் இதர ஆசிரியர்கள் யாவரும் தலையில் டர்பன் (தலைப்பாகை ) அல்லது தொப்பி தரித்து  கச்சை வேஷ்டியுடனோ அல்லது முழு சூட்டுடனோ தான் வருவார்கள் .எங்கள் டிராயிங் ஆசிரியர் எல்லா காலங்களிலும் கம்பளி கோட் அணிந்தது வருவார் ஆகவே மாணவர்கள் அவருக்கு "கம்பளி ராயர்" என்று பட்டப்பெயர் அளித்திருந்தனர்.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

திரு எம். ஆர்.ஜம்புநாதன்.

"பெங்களூர் தமிழ் சங்கம்" நூலகத்தில் பல நல்ல தமிழ் புத்தகங்கள் உள்ளன. நான் பெங்களூருக்கு நாற்பது வருடங்களுக்கு முன் வந்தவுடன் தமிழ் சங்கத்தில் வாழ் நாள் உறுப்பினராக சேர்ந்துகொண்டேன் . அங்கிருந்து எனக்கு பல நல்ல புத்தகங்களை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதுதான் தமிழில் நான்கு வேதங்களின் மொழிபெயர்ப்புகளை முதன் முறையாகக் கண்டேன்.இவை நூலாசிரியரின் கையொப்பமிட்ட பிரதிகள் என்பது விசேஷமாகும். இவ்வரிய மொழிபெயர்ப்புகளை அளித்தவர் அறிஞர் திரு எம். ஆர். ஜம்புநாதன் என்பவராகும். இப்பெரியார் மணக்கால் ராமஸ்வாமி அவதானிகள் இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1896ம் வருடம் பிறந்தவர் .திரு ஜகன்னாதன் வடமொழி, ஹிந்தி, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிபெற்றிருப்பினும், தாய் மொழி தமிழை மிகவும் நேசித்தார் . அதன் விளைவே அவரது மொழிபெயர்ப்புகள். தனது வாழ்நாளில் அதிக காலம் மும்பையில் வசித்த ஜகந்நாதன்அவர்கள், அங்கு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்காக முதல் "முனிசிபல் தமிழ் பள்ளியை" தொடங்கினார். மகரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஜாதிகள் கடந்த சமுதாயத்தை காணும் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவரது "ஆர்ய சமாஜத்தில்" தீவிரமாக ஈடுபட்டார் . சுவாமிகளின் "சத்யார்த்த பிரகாஷ் "
என்ற ஹிந்தி நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார்.

அவர் தீண்டாமையை அறவே ஒழிக்க தன்னால் இயன்ற எல்லா முயர்ற்சிகளையும் எடுத்தார் . அதன் விளைவே "நான் மறைகளை" தாய் மொழியாகிய தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் அவரது முயற்சியாகும். தனது வாழ்நாள் முழுவதையும் இதற்காகவே அர்ப்பணித்தார். ரிக் வேத மொழிபெய்ப்புக்குமட்டும் முப்பது ஆண்டுகள் உழைத்திருக்கிறார் , ஆயினும் ரிக் வேதத்தின் முதல் பாகம் அவரது மறைவிக்குப்பின் அவரது மனைவி சாந்தி ஜம்புனாதனால் வெளியிடப்பட்டது . வேதம் எல்லோருக்கும் பொதுவானது, அவை எல்லோருக்கும், குறிப்பாக, தாழ்த்தப்பட்டோருக்கு சேரவேண்டும் என்ற அவாவினால்,நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்தார்."யஜுர் வேத சத்பத ப்ரஹ்மணம்" என்ற அங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை "ஹரிஜனங்களின் பாதகமலங்களுக்கு" சமர்பித்திருக்கிறார் இப்பெரியவர்.

1974 ம் ஆண்டுவரை வாழ்ந்து வேத மொழிபெயர்ப்புக்க்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன்னை அற்பணிதுக்கொண்ட பெரியவர் திரு ஜம்புநாதன் அவர்கள் தமிழில் 16 நூல்களையும் ஆங்கிலத்தில் 3 நூல்களையும் தந்திருக்கிறார். ஒரு நிறுவனம் செய்யவேண்டிய பணியை ஒரு தனிமனிதனாக நின்று செய்து முடித்த இப்பெரியாரை இத்தலைமுறையை சேர்ந்த பலரும் அறிய வேண்டும் என்ற அவாவினால் எழுதி இருக்கிறேன்.

வணக்கத்துடன்
ப்ரஹ்மண்யன்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

நினைத்துப்பார்க்கிறேன்

நினைத்துப்பார்க்கிறேன்


சிறுவயதில் நான் படித்த தமிழ்ப் பத்திரிகை உலகிலும் மற்றும்புத்தகங்களிலிருந்தும் எனது நினைவில் நிற்கும் சில படைப்புகள் பற்றி இங்குஎழுத விரும்புகிறேன். எங்கள் வீட்டில் "ஆனந்த விகடன்" வெகு நாட்களாகவாங்கிக்கொண்டிருந்தோம் . ஆக ஆசிரியர் "கல்கி" அவர்களின் படைப்புகள்எனக்கு மிகவும் பரிச்யமான ஒன்று. அந்நாட்களில் கல்கி அவர்கள் நகைச்சுவைகலந்த நடையில் பல கதை, கட்டுரை எழுதிவந்தார். ஆனால் அவரது சரித்திரகதைகள்தான் என்னை ஈர்த்தன . முக்கியமாக பார்த்திபன் கனவு, சிவகாமியின்சபதம், பொன்னியின் செல்வன், இவற்றை பலமுறை படித்துள்ளேன். கல்கிஅவர்களின் தமிழ் நடை படிப்பவர்களுக்கு இனிமையாக இருக்கும். வாசகர்களைதன்னுடன் அழைதுச்செல்வார். படிக்கும்போதெல்லாம் அவருடன் சேர்ந்துசரித்திரகாலத் தமிழகத்தில் பயணித்து இருக்கிறேன். அவரது கதைகளைப்படிக்கும்போது நாம் அவருடன் கூட இருந்து நடப்புகளை பார்ப்பது போன்ற ஒருபிரமையை உண்டாக்குவார். அவரது ஹாஸ்யம் மிகவும் நுண்மையானது (subtle ). கல்கி அவர்களின் தியாக பூமி, மகுடபதி அவரது தேசபக்தியை வெளிப்படுத்தின. கணையாழியின் கனவு, கள்வனின் காதலி, மோகினித்தீவு, பொய்மான் கரடுஇன்றும் எனது மனதில் இருக்கும் புதினங்கள். அவரது சிறுகதைகள் பலவற்றைபடித்து அனுபவித்து இருக்கிறேன். "கர்நாடகம்" என்ற புனைப்பெயரில் அவர்எழுதிய இசை, நாடக விமரிசினங்களை மறக்கமுடியாது. ஆனால் அவரதுமேடைப்பேச்சுகள் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தன.எழுத்தில் வல்லவர்கள்பேச்சில் வல்லவர்களாய் இருப்பதில்லை என்பதை புரிந்துகொண்டேன்

என் நினைவில் வரும் மற்றொரு பெரியவர் மகாமஹோபாத்யாய உ ..வே.சுவாமிநாத அய்யர் அவர்கள். தமிழ் மூதறிஞர் உ. வே. சுவாமிநாத அய்யர் "என்சரித்திரம்" என்ற அவரது சுய சரித்திரத்தை "ஆனந்த விகடனில்" எழுதிவந்ததைபடித்து மகிழ்ந்தேன். ஆனால் அவரது தமிழ் எனது இளவயதில் சரியாகபுரியாததால், சமீபத்தில் மற்றொருமுறை இப்பொழுது "என் சரித்திர"த்தை படித்துவருகிறேன். அற்புதமான புத்தகம், நம்மை அவரது காலத்திற்கு அழைத்துச்சென்றுவிடுகிறார் தமிழ்த்தாத்தா.அவரது குருபக்தி யும் தமிழ் ஆர்வமும் மற்றும்அவரது இடையுறா இலக்கிய சிந்தனையும், தேடுதலும் நம்மை வியப்புறசெய்கின்றன . மிகவும் ஏழ்மையான ஒரு தமிழ் பிராமணர் தனது வாழ்நாள்முழுவதையும் தமிழுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி உழைத்ததைகாணும்போது மனதில் வியப்பும் வேதனையும் உண்டாகியது.


அதே காலகட்டத்தில் ஆனந்த விகடனில் பல பிரபல எழுத்தாளர்கள் எழுதிவந்தனர். அதில் முக்கியமா னவர்க்ளில் எஸ்.வி.வி என்றஎஸ்.வி.விஜயராகவாச்சரியார். எஸ்.வி.வி. யின் நகைச்சுவை இயற்கையானஒன்று. மற்றொருவர் பி ஸ்ரீ ஆச்சார்யா, இவர் வடமொழியிலும் தமிழிலும்நல்லறிஞர். இவரது "சித்ர ராமாயணத்தை" வெகுநாட்களுக்கு தொடர்ந்துவிகடனில் படித்து வந்தேன். நான் முறையாக கம்பராமாயணத்தை இவரதுஎழுத்துக்கள் மூலம் தான் அறிந்தேன் .இவரது ஆன்மீக கட்டுரைகள்அற்புதமானவை.

கல்கி அவர்கள் விகடனை விட்டு சென்று சொந்தமாக "கல்கி" வாரப்பதிப்பைஆரம்பித்தார். தொடர்ந்து "தேவன்" என்னும் R. மகாதேவன் "ஆனந்தவிகடன் " ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இவரது படைப்புகளில் ஜஸ்டிஸ்ஜகந்நாதன், கோமதியின் காதலன், மிஸ். ஜானகி,ஸ்ரீமான் சுதர்சனம் மற்றும்கோமதியின் காதலன் அவருக்கு பெயர் சேர்த்தன . ஆனால் அவரது நகைச்சுவைகலந்த "துப்பறியும் சாம்பு" தொடர் தமிழ் வாசகரிடத்தில் ஒரு புதிய கலகலப்பைஉண்டாக்கியது . தேவன் எழுதிய "ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்" என்றஅவரது தென்கிழக்காசிய பயண அனுபவங்கள் மற்றும் "ராஜத்தின் மனோரதம் " என்ற அவரது வீடு கட்டிய அனுபவங்கள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் மிகவும்ருசிகரமானவை. இளம் வயதிலேய காலமாகி விட்ட தேவன் நிறையஎழுதியிருக்கிறார். இவரது படைப்புகளைப்பற்றி தனியாகவே ஒரு கட்டுரைஎழுதலாம்.

"ஆனந்தவிகடன்" அளித்த, எனக்குப்பிடித்த மற்றொரு எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு . இவர் ஓர் பிறவி மேதை. தான் கண்ட வாழ்க்கைகாட்சிகளை எளிய தமிழில் சிறுகதைகளாக அளித்தார் . சுப்பு அவர்கள் எழுதியதில்லானா மோகனாம்பாள் " அந்நாளைய வாசகர்களிடையே ஓர் புரட்சியைஏற்படுத்தியது. "தில்லானா மோகனாம்பாள் " திரைக்காவியமாக வடிக்கப்பட்டதுஅது தமிழ் திரைப்பட உலகில் இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லபடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது .இவரது கதைகளில் இயற்கையானநகைச்சுவை மிளிரும் . இவரது கவிதை திறன் சாதாரண மக்களை அடைந்ததுசுப்பு அளித்த "காந்தி மகான் கதை " வில்லுப்பாட்டு வடிவில் பிரபல மானது.
ஆனந்தவிகடன் பல எழுத்தாளர்களை தமிழ் உலகிற்கு அளித்திருக்கிறது . அவர்களில் சிலர் சொந்தமாக பத்திரிகையை ஆரம்பித்தனர். சாவி & மணியம் முக்கியமானவர்கள். சா வி என்னும் சா விஸ்வநாதன் தனெக்கென்று தனி தமிழ் நடை கையாண்டு வெற்றிபெற்றவர். இவர் பல பத்திரிகைகளுக்கு மாறினார். வெள்ளிமணி ,தினமணி கதிர், கல்கி, விகடன் , குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார். சொந்தமாக சாவி, பூவாளி, விசைகள், மோனா ஆகிய இதழ்களை நடத்தினார் .இவரது படைப்புகளில் நவகாளி யாத்திரை, வாஷிங்டனில் திருமணம், விசிறி வாழை மற்றும் நகைச்சுவைக் கதைகள் சிலவே எனது மனதில் நின்றன.

ஆனந்த விகடன் பல ஓவியர்களை அறிமுகப்படித்தியது நான் முதலில் பார்த்தது "மார்கன்" அவர்களது சித்திரங்களைத் தொடர்ந்து வர்மா அவர்கள் கல்கியின் கதைகளுக்கு படம் வரைந்தார். பிறகு மாலி என்ற மேதை (மகாலிங்கம்) ஆனந்த விகடனில் சேர்ந்தார் அவர் ஒரு சித்திரப் புரட்சியையே செய்தார் . அவர் சித்திரம், அரசியல் கார்ட்டூன் மற்றும் போட்டோ (நிழற்ப்படம்)நேர் காணல் என்று பல்வேறு துறைகளில் வல்லவர் . அவர் புதிய இளம் சிதிரக்கரர்களை ஊக்குவித்தார் . அவர் காலத்தில் விகடனில் சாமா, ரவி, சேகர், ராஜு,தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு என்று பல புதிய சித்திரக்காரர்கள் விகடனில் சேர்ந்து படங்கள் வரைந்து வந்தனர்.
இதே காலகட்டத்தில் சிற்பி என்ற ஸ்ரீநிவாசன் ஆனந்தவிகடனில் தென்னாட்டு செல்வங்களை தனது துரிகயால் பதிவெடுத்து படங்கள் வரைவதில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார் .மிக அற்புதமான படைப்புகள். தென்னாட்டுக் கோவில்களையும் அங்குள்ள சிற்பங்களையும் மிக நுட்பமாக ஓர் அணுவளவும் மாறாமல் பதிவெடுத்துக் கொடுத்தார் சிற்பி அவர்கள். இவரது படைப்புக்கள் காலத்தில் அழியாத பொக்கிஷங்கள் .
 .