ஞாயிறு, 24 மார்ச், 2013

அது அந்தக்காலம்

அந்தக்காலந்தில்  சரஸ்வதி பூஜை  கழிந்து விஜய தசமி யன்று வித்யாப்யாசம்  செய்து பள்ளியில் சேர்ப்பது வழக்கம் .ஆனால்  என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு வேறொரு முக்கிய காரணம். வீட்டில் எனது விஷமங்களை சமாளிக்க முடியாமல் எனது தாயார் எங்கள் வீட்டில் ஒரு பகுதியில் குடியிருந்த எலிமெண்டரி பள்ளி வாத்தியார் ராமநாத அய்யரிடம் கேட்டு என்னை பள்ளியில் சேர்த்தார். பள்ளி எங்கள் வீட்டுக்கு அருகில், நடக்கும் தூரத்தில் இருந்தது. வயது குறைவாக இருந்ததினால் எனது வயதில் ஒரு வருடத்தைக்கூட்டி பதிவுசெய்து விட்டார் எனது தாயார்.. தினமும் வாத்தியாருடன் பள்ளி சென்று வருவேன்  . ஆனால் எனக்கு படிப்பைவிட விளையாட்டிலேயே நாட்டமிருந்ததால் பல  நாட்கள் பாதி வகுப்பிலிருந்து வீட்டுக்கு திரும்பிவிடுவேன் . எங்கள் பள்ளி  (கோவை)ஆர் எஸ் புரம் முனிசிபல் எலிமெண்டரி ஸ்கூல் என்ற பள்ளி.  மங்களூர் ஒட்டு கூரை யுடன் கூடிய நேர்த்தியான கட்டிடம்,  நாலு ஏக்கருக்குமேல் விளையாட  மைதானம். இலவச கல்வி. காலையில் முதலில் பள்ளியில் எல்லா மாணவர்களும் வரிசையாக நின்று  "கல்லார்க்கும்  கற்றவர்க்கும்  களிப்பருளும்  களிப்பே" என்ற திரு அருட்பாவுடன்  கடவுள் வாழ்த்து பாட்டு பாடுவோம்.  இங்கேதான் மகாகவி பாரதியாரின் பாட்டுக்களை நான் கற்றறிந்தேன் . எனக்கு பிடித்த பாட்டு  மகாகவியின்  "பாரத சமுதாயம் வாழ்கவே "என்ற கவிதை தான். பள்ளியின் "பெரிய வாத்தியார்" சிங்காரவேலு முதலியார் , நல்ல மனிதர்.  இப்பள்ளியே  சில வரு டங்களுக்குப்பின்  எட்டாம் வகுப்புகளுடன் நடுநிலைப் பள்ளியாக மாறியது . பிறகு ஆர். எஸ். புரத்திலேயே குமாரசாமி ஏரிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட பெரிய கட்டிடத்தில் மேநிலைப்   பள்ளியாக மாறியது. நான் இப்பள்ளியிலேயே படித்து  அதனுடன் வளர்ந்து வந்தேன் .

மேநிலைப் பள்ளியின் ஹெட் மாஸ்டர் கோவிந்தாச்சாரி,மிகவும் கண்டிப்பானவர் . அதிகம் பேச மாட்டார் . காலை இரண்டாவது மணி அடித்தவுடன் கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு பிரம்புடன் பள்ளி முழுவதிலும் சுற்றி வருவார் .பள்ளி தாழ்வாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது என்பது அவரது கண்டிப்பு. அவருடன் பல புதிய ஆசிரியர்கள் சிட்டி முனிசிபல்மே நிலைப் பள்ளியி லிருந்து மாற்றப்பட்டனர் அவர்களில் ஸ்ரீநிவாச அய்யர், நடேச அய்யர், கௌரி அம்மாள் ஜான் வாத்தியார்,  வெங்கடேச  அய்யர், நாராயணசாமி நாயுடு  என்பவர்கள் எனது ஆசிரியர்களாக இருந்தவர்கள்.திறமை மிக்க   இவ்வாசிரியர்கள் யாவரும் பிற்பாடு புதிதாக ஆரம்பித்த பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டது ஒரு சிறப்பான நிகழ்வு  .   ஸ்ரீ நிவசரகவாச்சர்யர் எனது சம்ஸ்க்ருத  ஆசிரியர் .அந்த நாட்களில் ஹிந்தி  மற்றும் தக்கிளியில் நூல் நூற்பது என்று இருவகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன . இவை கட்டயப்பாடங்கள்  (Compulsory subjects) என்று அழைக்கப்பட்டன .ஆனால் இவையிரண்டும் தேர்வுக்கு அவசியமில்லை யாகையால் மாணவர்கள்   யாரும் அதிக கவனம் செல்லுத்தவில்லை. அன்றைய ஆசிரியர்கள் யாவரும் பள்ளிக்கு மிகவும் கவனமாக உடை உடுத்திக்கொண்டு வருவார்கள் . பெரியவாத்தியார் மற்றும் இதர ஆசிரியர்கள் யாவரும் தலையில் டர்பன் (தலைப்பாகை ) அல்லது தொப்பி தரித்து  கச்சை வேஷ்டியுடனோ அல்லது முழு சூட்டுடனோ தான் வருவார்கள் .எங்கள் டிராயிங் ஆசிரியர் எல்லா காலங்களிலும் கம்பளி கோட் அணிந்தது வருவார் ஆகவே மாணவர்கள் அவருக்கு "கம்பளி ராயர்" என்று பட்டப்பெயர் அளித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக